தமிழின் மூத்த பதிவர் டோண்டு ராகவன் மறைவின் நினைவாக

முதலில் இந்த செய்தியை ட்விட்டர் ஊடாகத் தான் அறிந்து கொண்டேன், அதன் பின் பேஸ்புக், வலைப்பதிவு தோழர்கள் ஊடாக உறுதி செய்து கொண்டேன். ஆனால் என்னால் நம்பவே முடியவில்லை, டோண்டு ராகவன் இறந்தவிட்டார் என்பதை. தனது இறுதி நாள் வரை வலைப்பதிவில் வலம் வந்தார், கருத்துக்கள் இட்டார், ஆனால் மரணம் விட்டுவைக்கவில்லை.

தமிழ் வலைப்பதிவுகளை வாசிக்கத் தொடங்கிய காலங்களில் இருந்தே டோண்டு ராகவன் பெயரை நான் அறிந்திருந்தேன். சென்னையில் வசித்திருந்த காலத்தில் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை, வலைப்பதிவர்களுக்கு இடையிலான தொடர்பாடல்கள் நட்பு வட்டங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே பெருகி வந்துள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் புலம் பெயர்ந்துவிட்டதால், இவ்வாறான நல்ல மனிதர்களை காணும் வாய்ப்பையே இழந்துவிட்டேன்.

டோண்டு ராகவனோடு தொடக்கக் காலங்களில் விவாதங்கள் மட்டுமே செய்வதுண்டு. குறிப்பாக அவரது கருத்துக் களம் என்னில் இருந்து மாறுப்பட்டது. இணைய தளங்களில் இந்து வலதுசாரிகள் பலரோடும் கருத்து மோதல் ஏற்பட்டதுண்டு, ஆனால் பக்குவத்தோடு தாம் கொண்ட கருத்தை தெளிவாகவும், கண்ணியமாகவும் முன் வைப்பதில் சிறந்தவர் டோண்டு சார். அத்தோடு லாஜிக் இல்லாத விடயங்களை பூசி மெழுகி மழுப்பவதில்லை, இது தான் எனது நிலை என்று கூறிவிடுவார்.

கடந்த சில காலமாகவே அவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார் என்பதை அறிய முடிந்தது. அதில் இருந்து மீண்டும் வந்து பதிவுகளை எழுதி வந்தார் என்பதை அறியும் போது அவரின் மனத்திடம் வலிமை வாய்ந்தது என்பதை ஒத்துக் கொள்ளவே வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சிலரால் வம்புழுக்கப்பட்டு போலி டோண்டு என்பவரால் குடைச்சல் கொடுக்கப்பட்டவர் டோண்டு ராகவன். அது அவரை மட்டுமில்லாமல் அவரது குடும்பத்தாரையும் வேதனைக் கொள்ளச் செய்தது. ஆனால் சற்றும் மனம் தளராமல் எதிராளிகளின் விசமங்களை முறியடித்து பதிவுலகில் தனக்கே உரிய இடத்தை பிடித்துக் கொண்டார்.

அத்தோடு தான் மனம் விரும்பிய மொழிப்பெயர்ப்பு துறையில் நுழைந்து அதனைச் சீரும் சிறப்புமாக ஆற்றி வந்தார் குறிப்பாக ஜெர்மானிய மொழியில் வல்லமைப் பெற்ற தமிழர்கள் மிகவும் சொற்பம். அவர் ஆற்றிய மொழிப்பெயர்ப்பு பணி என்பது நிச்சயம் நம்மால் நினைத்து பார்க்க இயலாத ஒரு காரியம் என்பேன்.

தனது மறைவுக்கு ஒரு நாள் முன்னர் கூட பதிவு எழுதி இருந்தார், அத்தோடு அதேக் கருத்துடைய எம் பதிவில் கூட வந்து கருத்திட்டு சென்றார். நிச்சயம் மூத்த வயதில் கூட அயராது வலைப்பதிவு உலகத்துக்கு பங்காற்றியுள்ளார். ஆனால் அவர் நம்மோடு கூட இல்லை என நினைக்கும் போது மனம் வருந்துகின்றது.

ஆனால் வாழும் உயிர்கள் என்றாவது ஒரு நாள் இயற்கையோடு கலந்துவிடுவது என்பதே உலக நியதியாக உள்ளது. மனிதர்கள் இறப்புக்கு பின் வேறு உலகம் செல்வார்கள், உயிர் நிலைத்து நிற்கும் என்பது எல்லாம் நிரூபணமற்ற நம்பிக்கைகள் மட்டுமே. அவற்றில் எனக்கு உடன்பாடும் இல்லை. மனிதன் வாழும் போது தமக்கான பல தடங்களை விட்டுச் செல்கின்றான். இந்த உலகில் நாம் எவ்வாறு வாழ்கின்றோமோ அதன் பிம்பங்கள் மக்களிடையே நிற்கும்.

டோண்டு ராகவன் ஐயாவின் அன்பும், ஆற்றலும், கடும் உழைப்பும், நட்பும் என்றுமே தமிழ் வலைப்பதிவர்களின் நெஞ்சில் நீக்கமற நிலைத்திருக்கும். அவரது எழுத்துக்களை போதிய முறையில் பாதுக்காக்கப்படல் வேண்டும், அவற்றுக்கு நாம் மறு ஜென்மம் அளிக்கப்படல் வேண்டும். ஒருவரின் இறப்புக்குப் பின் அவரது இணையத் தடங்களை தற்காத்துக் கொள்ள வழி வகைகள் உண்டு. இருந்த போதும் அவைக் குறித்த முறையான சட்டங்கள் எங்கும் இயற்றப்படவில்லை. அமெரிக்காவில் ஒருவரது இறப்புக்குப் பின் அவரது தனிப்பட்ட இணையப் பக்கங்களை விரும்பியவர் பெற்றுக் கொள்ள வழிவகைகள் செய்யப்பட்டு உள்ளது.

நிச்சயம் டோண்டு ராகவன் ஐயாவின் பதிவுகள் அவரது நினைவாகப் பாதுக்காக்கப்பட வேண்டும். அத்தோடு அவரது வலைத்தளத்தை கூகிள் எத்தனைக் காலம் நிலுவையில் வைத்திருக்கும் என்பதையும் நாம் அறியோம், ஆகவே அவரது எழுத்துக்களை அச்சில் ஏற்றிக் கொடுப்பதும் முறையான ஒன்றாக இருக்கும் என நான் கருதுகின்றேன். அதுக் குறித்து அவரது குடும்பத்தாரும், சக பதிவர்களும் முயற்சி எடுக்க வேண்டுகின்றேன். அதுவே அன்னாருக்கு நாம் ஆற்றும் நன்றி உதவியாக இருக்கும். மாற்றுக் கருத்தாளர் என்ற போதில் கூட அவரின் தனி மனித நற்குணங்களை போற்றி இத்தருணத்தில் நினைவுக் கொள்ள ஆசைப்படுகின்றேன்.

வில்லியம் சேக்ஸ்பியர் கூறியது போல, “கோழைகள் தமது இறப்புக்கு முன் பலதடவைகள் இறப்பார்கள், துணிவுள்ளோரும் வீரர்களும் வாழ்க்கையில் ஒரு தடவை தான் இறப்பார்கள்” என்றக் கூற்றுக்கு இலக்கணமாய் வாழ்ந்து மறைந்துள்ளார் டோண்டு ராகவன்.

டோண்டு ராகவனின் நினைவாக : 

தமிழில் முதன் முதலில் பதிவு எழுதத் தொடங்கி இறுதி வரை பதிவுகளை எழுதிய மூத்தப் பதிவர் டோண்டு ராகவன். அவர் எழுதிய முதல் பதிவு தான் இதோ.

வலைப்பூ பதிப்பது இவ்வளவு எளிதாக இருக்கும் என்று கனவிலும் எண்ணியது இல்லை. தமிழில் தட்டச்சு செய்கிறோம் என்பதைப் பார்க்க மிக்க மகிழ்ச்சி ஏற்படுகிறது. நான் ஒரு மொழிபெயர்ப்பாளன். ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலிருந்து ஆங்கிலத்துக்கும் ஆங்கிலத்திலிருந்து ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகளுக்கும் மொழி பெயர்ப்பது என் வேலை. மின் பொறியியலில் பட்டம் பெற்று அத்துறையில் 23 வருடம் வேலை செய்த அனுபவம் உண்டு. மொழி பெயர்ப்பாளனாக ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் 26 வருடங்களுக்கு மேல் அனுபவம் உண்டு. புத்தகஙள் படிப்பதில் மிக்க விருப்பம். என் கன்னி முயற்சிக்கு சக வலைப்பதிவாளர்களின் ஒத்துழைப்பை எதிர் பார்க்கிறேன். பின் வரும் வலைப்பூக்களில் மீண்டும் எழுதுவேன்.
அன்புடன்,  டோண்டு ராகவன் (11/08/2004)

ஜெயா டிவியில் அவர் அளித்த பேட்டி இதோ :


டோண்டு ராகவன் காரைக்கால் வானொலிக்கு அளித்த செவ்வி இங்கு



11 Comments

  1. பெரியவர் டோண்டு ராகவன் அவர்களின் மறைவுக்கு அருமையான அஞ்சலி பதிவு.

    ReplyDelete
  2. ஐயா அவர்களுக்கு மீண்டும் எனது அஞ்சலிகள்! அவரின் நினைவுகள் தாங்கிய சிறப்பான இடுகை! அவரின் பதிவுகளைப் பாதுகாக்கவென நீங்கள் வைத்த வேண்டுகை நியாயமானதே!

    ReplyDelete
  3. அன்னாரின் ஆன்மா அமைதியடையவும், அவரது இல்லத்தினர் இழப்பில் இருந்து மீண்டு வரவும் பிராத்திகிறேன்,

    ReplyDelete
  4. அவரின் ஆன்மா அமைதி அடையட்டும்

    ReplyDelete
  5. தன‌து க‌ருத்துக்க‌ளைச் சொல்ல‌த் த‌ய‌ங்காத‌ ஒரு துணிச்ச‌லான‌ வ‌லைப்ப‌திவாள‌ரின் ஆத்மா சாந்திய‌டையட்டும்.

    ReplyDelete
  6. வருந்துகிறேன்! வலைப்பதிவர் சந்திப்புகளில் இரண்டு சந்தித்திருக்கிறேன்.இரண்டு வார்த்தைகள் மட்டுமே இருவரும் பேசி இருக்கிறோம்ன்.தனது கருத்தில் உறுதியாக இருந்தவர்.!அவரது எழுக்கள் பிடிக்கும் ஏனெனில்அவரது உள்ளத்தில் இருப்பது எழுத்திலும்.
    இருக்கும்.உள்ளொன்றும் புறமொன்றும் இல்லை என்பதே அவரது சிறப்பு. அவரது மரணம் தமிழ் வலைப்பதிவுலகிற்கு இழப்பு!

    ReplyDelete
  7. அவரது கருத்துக்களில் நிறைய கருத்து வேறுபாடு இருந்தாலும் தொடர்ந்து உறுதியாக வாதிட்டவர் என்பதை பதிவுகளிலிருந்து அறிகிறேன்... ஆழ்ந்த இரங்கல்கள்!

    ReplyDelete
  8. ஆழ்ந்த இரங்கல்கள்!

    ReplyDelete
  9. அவரை ஒரே முறை இண்டிப்ளாக்கர் சந்திப்பில் பார்த்துப் பேசினேன்.
    பதிவுலகின் பிதாமகன் மறைந்து விட்டார்.அஞ்சலிகள்

    ReplyDelete
  10. ம்ம் உண்மையில் வரவேற்க வேண்டிய ஆலோசனை மூத்தவர்கள் அனுபவம் நமக்கு வழிகாட்டி!

    ReplyDelete
  11. ஒரு தாயாக,என்னை விட்டு பிரிந்த என் மகனின் நினைவாக அவனுடைய ப்ளாக்கை நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.கண்ணில் கண்ணீருடன்.
    கார்த்திக் அம்மா

    ReplyDelete


வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Spam - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும். சுட்டிக்களைப் பகிர்வோர் GOO.GL பயன்படுத்தி சுருக்கிப் பகிரவும்.

 
Posts RSSComments RSSBack to top
© 2011 கோடங்கி ∙ Designed by BlogThietKe
Released under Creative Commons 3.0 CC BY-NC 3.0